பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில், இரண்டு தனியார் திருமண மண்டபங்களுக்கு இடையில், புதிதாக மதுக்கடை அமைக்க கட்டுமானப்பணி நடைபெற்று வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பேராவூரணி நகர் 2 வது வார்டு, பொதுமக்கள் ஒன்று கூடினர். இப்பகுதியில் குடியிருப்புகள் அமைந்திருப்பதாலும், அரசுப்பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையாக இருப்பதாலும், அருகிலேயே அரசு மருத்துவமனை, அஞ்சலகம், பெட்ரோல் பங்க், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளதாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே இங்கு மதுபானக்கடை அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, 50 க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சாலை மறியல் செய்ய தயாராகினர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜி.ஜனார்த்தனன், தனிப்படை ஏட்டு பெத்தபெருமாள் உள்ளிட்டோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்ட கடிதத்தை காவல்துறை ஆய்வாளரிடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆய்வாளர், டாஸ்மாக் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும்" என உறுதியளித்தார். இதனையடுத்து சாலை மறியல் செய்யாமல் பொதுமக்கள் சென்றனர். இந்நிலையில் சற்று நேரத்தில் மதுபானக்கடை அமைக்க, பில்லர் அமைக்கப்பட்டிருந்ததை தாங்களாகவே மதுபானக்கடை பார் ஏலதாரர்கள் அகற்றினர்.
நன்றி : தீக்கதிர்