தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விசைப்படகிற்கு மீன் பிடி தடைக்காலம் வியாழக்கிழமை முதல் தொடங்கியது. அரசு மீன் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்வளம் பெருக வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடலில் மீன் பிடிக்க விசைப்படகிற்கு மட்டும் அரசு ஏப்ரல் 15 முதல் மே 29 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு ஆண்டுதோறும் தடைவிதித்து வருகின்றது. அதே சமயம்ஏப்ரல் 15ந் தேதி விசைப்படகு கடலுக்கு செல்லவேண்டிய சனிக்கிழமை என்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் வியாழனன்று முதலே தடைக்காலம் தொடங்கியது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 301 விசைப்படகுகள், சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டினம் ஆகிய மீன் துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைப்படகு மீனவ மாநிலச் செயலாளர் மல்லிப்பட்டினம் தாஜூதீன் கூறுகையில், “இந்த தடைக் காலத்தினால் விசைப்படகில் மீன் பிடிக்கக்கூடிய மீனவர்கள் சுமார் 1500 பேரும் மீன் பிடித் தொழில் சார்ந்த மீன் வியாபாரி, கருவாடு வியாபாரி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய முதலீட்டாளர்கள், துறைமுகங்களில் கடை வைத்துநடத்துபவர்கள் என 10 ஆயிரம் பேருக்குமேல் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.45 நாள் தடைக் காலத்திற்கு மீனவர்களுக்கு அரசு 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. ஒரு மீனவர் குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 500 ரூபாய் குடும்ப செலவினத்திற்கு தேவைப்படுகிறது. எனவே மீனவக்குடும்பம் ஒவ்வொன்றிற்கும் 100 கிலோஅரிசி, 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அரசு வழங்க வேண்டும். மேலும் 45 நாள் மீன் பிடி தொழிலுக்குச் செல்லாமல் படகுகள் நிறுத்தப்படுவதால் மீண்டும் தொழிலுக்குச் செல்லபடகு ஒன்றிற்கு மராமத்துச் செலவு 50 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய்வரை ஆகிறது. இதை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்” எனக் கூறினார்.