தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தில் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் வெள்ளிக்கி ழமையன்று மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். கொன்றைக்காடு கிராமத்தில் பட்டுக்கோட்டை- பேராவூரணி மெயின் ரோட்டில் அரசுக்கு சொந்தமான மதுபானக்கடை கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. நீதிமன்ற உத்தரவையடுத்து நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. இதில் பேராவூரணி நகரில் இருந்த 4 கடைகளும் மூடப்பட்டது. இதனால் கொன்றைக்காடு மதுக்கடையை நோக்கி குடிமகன்கள் படையெடுக்கத் தொடங்கினர். இதனால் குடியிருப்பு பகுதிகளில் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், பெண்கள், மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் இடையூறாக இருக்கும் மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், டாஸ்மாக் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து விரைவில் கடை அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்தனர். ஆனால் 20 தினங்கள் கடந்த நிலையிலும் இன்னும் கடை அப்புறப்படுத்தப்படவில்லை என்று கூறி கிராமத்தினர், பெண்கள், சுய உதவிக்குழுவினர் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கே மதுக்கடையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் இப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து டாஸ்மாக் டெப்போ மேலாளர் ராஜசேகர், உதவியாளர் பார்த்திபன், கோட்ட கலால் அலுவலர் புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் அரசுத்தரப்பிலும், பொதுமக்கள் தரப்பில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கே.பழனிவேலு, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் ஜெய்சங்கர், ராமநாதன், குட்டி அம்பலம், கண்ணன், பெரியசாமி, மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பழனியம்மாள், சாந்தி, விஜயா, அன்னக்கிளி, மாரியம்மாள், சந்திரா, பிரேமா, வீரலட்சுமி உள்ளிட்டோர் அந்த இடத்திலேயே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் இன்னும் 10 தினங்களுக்குள் அரசு மதுபானக்கடை இடமாற்றம் செய்யப்படும் என அரசுத் தரப்பில் எழுத்துபூர்வமாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து இப்பகுதி பெண்களின் கூறுகையில் ,அரசு உறுதியளித்தது போல 10 தினங்களுக்குள் மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
நன்றி : தீக்கதிர்