அரசு கேபிள் டி.வி ஒளிபரப்பு முழுமையாக டிஜிட்டல் மயமாக மாற உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பாக 'அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன்' என்னும் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கேபிள் தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சேவைகள் அனலாக் என்னும் பழைய வடிவத்தில் இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்தன.
இந்த சேவைகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் வைத்திருந்தது. இந்த கோரிக்கை நெடுநாட்களாக பரிசீலனையில் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன்' கேபிள் ஒளிபரப்பு சேவைகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக டிஜிட்டல் ஒளிபரப்பு விரைவில் அமலுக்கு வருமென்று தெரிகிறது.
மேலும் டிஜிட்டல் சேவைக்கு அனுமதியளித்ததற்காக மத்திய அரசுக்கும், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.