பேராவூரணி பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளான நாடியம், ஊமத்தநாடு, சோலைக்காடு, கொரட்டூர், விளங்குளம் பெருமகளூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகளும், மற்ற பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சிறுசிறு குளங்களும் உள்ளது. இவை அனைத்திலும் நெய்வேலி காட்டாமணக்கு படர்ந்து மூடி கிடக்கிறது. இதனால் பாசன ஏரிகளில் முழுமையாக தண்ணீர் நிரம்பாமல் பாசனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
வடிகால் வாரிகளையும் விட்டுவைக்காமல் இந்த காட்டாமணக்கு செடி மூடியுள்ளதால் மழை வெள்ள காலங்களில் வடிகால் வசதியின்றி பட்டாநிலங்களையும் மழை நீர் சூழ்ந்து பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிடுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல ஏரிகளில் இருந்த காட்டாமணக்கு செடியில் உயிர்க்கொல்லி மருந்தை கைத்தெளிப்பான் மூலம் தெளித்து செடிபட்டு போன பின் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அப்படி இருந்தும் அதன் வேர்பாகத்தில் இருந்து சிறிது சிறிதாக வளர்ந்து கிளை வெடித்து தற்போது மூடி உள்ளது.
இந்த செடியினை வெட்டி அழித்தால் எந்த கோடையிலும் வேர்பகுதியிலிருந்து துளிர்விட்டு வளர்ந்து அதிக அளவில் கிளைகள் வெடித்து வெகுவாக பரவும் நிலை கொண்டது. எனவே இதை வேரோடு அழிக்க பொக்லைன் இயந்திரம் மூலம் தூர் வாரினால் மட்டுமே இதை முழுமையாக அழிக்க முடியும். எனவே இந்த கோடை பருவத்தில் அனைத்து ஏரி, குளங்களும் வறண்ட நிலையில் உள்ளது.
அதுமட்டுமின்றி ஏரி மற்றும் குளங்களின் முகப்பு பகுதியில் தூர்ந்துபோய் மண்மேடாக காட்சியளிக்கிறது. இதனால் பருவமழை பெய்யும் காலங்களில் ஏரி குளங்களில் போதுமான அளவு நீர் நிரப்ப முடியாமல் ஏரி பாசன பகுதிகளில் ஒருபோகம் சாகுபடி செய்வதற்கு கூட நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் பெரிய ஏரிகளில் ஆக்கிரமிப்புகளால் ஏரிகள் குறுகி சிறு குளம்போல் காட்சியளிக்கிறது. ஏரி குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் ஏரிபாசன பகுதிகள் ஒருபோக சம்பா சாகுபடி செய்ய போதுமான நீர் நிரப்ப முடியும். எனவே தற்போது வறண்ட நிலையில் உள்ள கோடை பருவத்தை பயன்படுத்தி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து ஏரி, குளங்கள் மற்றும் வடிகால் வாரிகளையும் தூர்வாரினால் நெய்வேலி காட்டாமணக்கு செடி முழுமையாக அழிந்து போதுமான அளவு பாசனத்திற்கு ஏரி, குளங்களில் நீர் நிரப்ப முடியும் எனவே தற்போதுள்ள கோடை பருவத்தில் அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.