பேராவூரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேரூராட்சி 3- ஆவது வார்டு ஆத்தாளூர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே குடிதண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் வெள்ளிக்கிழமை அன்று பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மணி ரவி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர். தகவல் அறிந்து போராட்ட இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆர்.பி.ராஜேந்திரன், தெட்சணாமூர்த்தி, பேரூராட்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் தர்ஷணா, கிராம நிர்வாக அலுவலர் கணே.மாரிமுத்து, பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் மதியழகன் ஆகியோரும் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.இதில் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் எனவும், ஆத்தாளூரில் அங்காடி கட்டித்தரப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நன்றி : தீக்கதிர்