பேராவூரணி அருகே பள்ளத்தூரில் நிரந்தரமாக மூடக்கோரி டாஸ்மாக் கடையை முன்பு பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள பள்ளத்தூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே கடைவீதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடை நீதிமன்றம் உத்தரவிற்கு பின் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கடை நேற்று முன்தினம் மாலை பள்ளத்தூர் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்ள இடத்தின் அருகில் திறக்கப்பட்டது. மேலும் விவசாய நிலங்கள் நிறைந்த வயல்வெளி பகுதியான இந்த பகுதியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படும் குளங்கள் உள்ளன. டாஸ்மாக் கடை திறந்த தகவல் அறிந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டதால், திறந்த சிறிது நேரத்திலேயே கடை மூடப்பட்டது. இருப்பினும் அந்த கடையை நிரந்தரமாக மூடகோரி நேற்று மதியம் பாஜகட்சியின் சார்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் குகன் தலைமையில் அந்த டாஸ்மாக் கடை முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி ,கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக நடமாடும் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். தற்போது திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு 12 மணிக்கு பிறகுதான் விற்பனை செய்யவேண்டும் என அறிவித்ததிருந்தும் பார்களில் காலை முதல் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி:தினகரன்
நன்றி:தினகரன்