குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நேர்காணல் முகாமில் ஆர்டிஓ தெரிவித்தார்.சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி பெருமகளூர் தென்பாதி ஆதியாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை ஆர்டிஓ கோவிந்தராசு தலைமை வகித்தார். பேராவூரணி தாசில்தார் ரகுராமன் முன்னிலை வகித்தார்.
முகாமில் நலிந்தவர் நலத்திட்ட உதவி 20நபர்களுக்கும், மின்னணு குடும்ப அட்டை 30பேருக்கும், இலவச வீட்டுமனை 7பேருக்கும், பட்டா மாறுதல் 11பேருக்கும் என மொத்தம் 68 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி ஆர்டிஓ கோவிந்தராசு பேசியதாவது:
அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
எனவே திட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்து, அதன் பலன்களைபெற வேண்டும். வரலாறு காணாத வறட்சியால் குடிதண்ணீர் தட்டுப்பாடு இருந்தால், அதனை போக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர், சாலை, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்படும். உங்கள் குறைகளை பொதுமக்கள் எந்நேரமும் தயக்கமின்றி முறையிடலாம் என்றார்.முன்னதாக பெருமகளூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமமூர்த்தி, திமுக நகர பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் முருகானந்தம் மற்றும் சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.முகாமில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரீட்டா ஜெர்லின், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார், ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் (பட்டுக்கோட்டை) பாஸ்கரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினகரன்