பேராவூரணி அருகே மணக்காட்டில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு ரெட்டவயலில் பொதுமக்கள் சாலை மறியல்.
ஜூலை 27, 2017
0
பேராவூரணி அருகே மணக்காடு பகுதியில்அரசு டாஸ்மாக் கடை அமைப்பதைக் கண்டித்தும், கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் ரெட்டவயல் கடைவீதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேராவூரணி வட்டம் மணக் காடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதை அறிந்த மணக்காடு, வீரக்குடி, ரெட்டவயல், கொளக் குடி, அமர சிம்மேந்திரபுரம் கிராமஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ‘டாஸ்மாக் மதுபான எதிர்ப்பு கூட்டமைப்பு’ ஏற்படுத்தியுள்ளனர். இவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் “பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை அமைத்தால் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவோம்” என எச்சரித்திருந்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள்,சார்பில் கடந்த வாரம் பட்டுக் கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.
அம் மனுவில், “பேராவூரணி வட்டம் மணக்காடு பகுதியில் செந்தாமரை செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை தொடங்க உள்ளனர்.மணக்காடு ஊராட்சி மிகவும் பின்தங்கிய பகுதி. ஆதிதிராவிடர் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும், பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவமனைக்குச் செல்லும்பெண்கள், வெளியூர் சென்று வேலை செய்து வருவோர் நடமாடும் பகுதியாகவும் உள்ளது. மாலை, இரவு நேரங்களில் பேருந்துவசதி போதிய அளவில் இல்லாதபகுதியாக இருப்பதால், ரெட்டவயல் - மணக்காடு சாலையில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் தனியே நடந்து வரும்போது அசம்பாவிதங்கள் நடைபெறும் வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் மதுக்கடை அமைக்கப்பட் டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே மேற்கண்ட இடத்தில்மதுக்கடை அமைக்க அனுமதிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள், கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி புதன்கிழமை காலை ரெட்டவயல் கடைவீதியில் சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட 300 பேர் கறுப்புக் கொடிகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் என்.அன்பழகன், வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ், கிராம நிர்வாக அலுவலர்மோகன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் தரப்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.கருப்பையன், விவசாயிகள் சங்க நிர்வாகி கொரட்டூர் நீலகண்டன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில்வியாழன் (ஜூலை 27) அன்று பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், அதில் சமரச தீர்வு காணலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
நன்றி:தீக்கதிர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க