பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் - ரெண்டாம்புளிக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என மல்லிப்பட்டினம் பிரண்ட்ஸ் கிளப் கோரிக்கை விடுத்துள்ளது.பட்டுக்கோட்டை தாலுகா மல்லிப்பட்டினம் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முக்கியமான ஊராட்சியாகும். இங்கு மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. ஏராளமான வாகனங்களில் கடல் உணவுப்பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மல்லிப்பட்டினத்தில் இருந்து ரெண்டாம்புளிக்காடு வழியாக பட்டுக்கோட்டை, பேராவூரணி செல்லும் பாதை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு பழுதடைந்து போக்குவரத்திற்கு உபயோகமற்ற நிலையில் பள்ளமும் - படுகுழியுமாக உள்ளது. இவ்வழியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அஞ்சலகம், குடியிருப்புகளும் உள்ளன. கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகம், மருத்துவமனை என பல வேலைகளுக்கும் பட்டுக்கோட்டை செல்ல இச்சாலையையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. மல்லிப்பட்டினம்-ரெண்டாம்புளிக்காடு சாலை பழுதடைந்து கிடப்பதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். சேதமடைந்து கிடக்கும் இந்தச் சாலையை சீரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மல்லிப்பட்டினம் பிரண்ட்ஸ் கிளப் நிர்வாகி மாலிக் மற்றும் மீனவர் சங்க நிர்வாகி சேக்தாவூத் கூறுகையில்,” இச்சாலையை சீரமைத்து தரக்கோரி, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. உடனடியாக நெடுஞ்சா லைத்துறையினர் சாலையை சீரமைத்து, புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சாலையில் உள்ள மதுக்கடைக்கு செல்வோர் பள்ளத்தில் விழுந்து அடிபடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம்” என்றனர்.
நன்றி:தீக்கதிர்
நன்றி:தீக்கதிர்