பேராவூரணி, தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். தாலுகா தலைநகரமாகவும், தனி சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. 18 வார்டுகளையும்சுமார் 40 ஆயிரம் பேர் மக்கள் தொகையும் கொண்ட பேராவூரணியில் தாலுகாஅலுவலகம், அரசுக்கல்லூரி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.இப்படி முக்கியத்துவம் பெற்ற தாலுகாதலைநகரான பேராவூரணியில் சேதுசாலை மற்றும் பள்ளிவாசல் எதிர்புறம் போன்ற மக்கள் வந்து போகும் இடங்களில் சிறு மழை பெய்தாலே மழைநீர் தேங்கிநின்றுவிடுகிறது. இதனால் நோய் தொற்றுபரவும் அபாயம், கொசுக்கள் உற்பத்தி ஆகும் அபாயம் உள்ளதோடு சாலையில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்க முடியாத அவலநிலை உள்ளது. பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை கடந்து செல்கையில், சாலையில் நடப்போர் மீது சேற்று நீரை வீசிச் செல்கிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகளுடன் சண்டையிடுவதும், பள்ளி மாணவிகள் சீருடைகளில் சேறு படிந்து அழுதபடியே வீடு திரும்புவதும் தொடர்கதையாகி விட்டது.சேதுசாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே காரைக்குடி-திருவாரூர் அகல இரயில் பாதை பணிகளுக்காக பேருந்துகள் செல்லும் சாலையின் குறுக்கேஇருப்பு பாதையை உயர்த்தி அமைத்து,சாலையின் இருபுறமும் மண் கொட்டி உயர்த்தி இருப்பதாலும் தார்ச்சாலையில் மழைநீர் தேங்கி நின்று இவ்வழியே செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செல்லும் மாணவிகள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் செல்வோருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் வியாழனன்று மாலை பெய்த மழைக்கு தேங்கிய நீர் வடிய வழியில்லாமல் நின்றது. பேரூராட்சி பணியாளர்கள் வெள்ளிக்கிழமையன்று சாலையோரம் குழி தோண்டி மழை நீரை வடியவைத்தனர். இதே நிலை தான் அண்ணாசிலை மற்றும் பள்ளிவாசல் அருகிலும் காணப்படுகிறது.சிபிஎம் கோரிக்கை இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி நகரச்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி கூறுகையில், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளாத நிலையேஉள்ளது. இவ்வழியே தான் நாள்தோறும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் சென்று வருகின்றனர். பொதுமக்கள், மாணவிகள் படும் சிரமம் கண்ணிற்கு தெரியவில்லையா? அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துதண்ணீர் வடிகாலுக்கு உரிய ஏற்பாட்டை செய்ய வேண்டும். மழைநீர் அருகில் உள்ளஆனந்தவல்லி வாய்க்காலில் சென்று விழுந்து வழிந்தோடுமாறு நிரந்தரமான தீர்வை மேற்கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் பொதுமக்கள்பங்கேற்புடன் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.பேரூராட்சி மற்றும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி:தீக்கதிர்
நன்றி:தீக்கதிர்