சரக்கு மற்றும் சேவை வரியால் உரங்கள் விலை உயர்வு விவசாயிகள் அதிர்ச்சி.

Unknown
0



காவிரி டெல்டா என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது. இங்கு குறுவை சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை.

இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வழக்கமாக நடைபெறும் சாகுபடி பரப்பளவில் இருந்து பாதியாக குறைந்து விட்டது. இந்த சாகுபடிக்கு தேவையான உரங்களும் இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அமல் படுத்தி உள்ளது. இந்த வரி விதிப்பதால் தற்போது உரங்கள் விலையும் அதிகரித்து உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதற்கு முன்பு உரங்களுக்கு 12 சதவீதம் வரி என அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியால் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 50 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.11-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.75 வரை விலை உயர்ந்துள்ளது. இதே போல் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்துகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையில் தற்போது இடுபொருட்களான உரம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உரங்களின் விலை (50 கிலோ கொண்ட 1 மூட்டை) வருமாறு:-
ரூ.284-க்கு விற்கப்பட்ட யூரியா ரூ.11 உயர்ந்து ரூ.295-க்கு விற்கப்படுகிறது. இதே போல் ரூ.1,025, ரூ.1,035, ரூ.1,040, ரூ.1065, ரூ.1,090-க்கு விற்கப்பட்ட டி.ஏ.பி. உரம் தற்போது ரூ.1,076, ரூ.1,086, ரூ.1,081, ரூ.1,105, ரூ.1,165 என அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.40 முதல் ரூ.75 வரை விலை அதிகரித்துள்ளது.

ரூ.550-க்கு விற்கப்பட்ட பொட்டாஷ் உரம் ரூ.29 விலை உயர்ந்து ரூ.579 ஆக அதிகரித்துள்ளது. ரூ.1,065-க்கு விற்கப்பட்ட சிங் சல்பேட் உரம் ரூ.42 உயர்ந்து ரூ1,107 ஆக அதிகரித்துள்ளது. கலப்பு உரங்களான (காம்ப்ளக்ஸ்) ரூ.14 முதல் ரூ.57.50 வரை அதிகரித்துள்ளது. இந்த வகை உரங்கள் ரூ.825 முதல் ரூ.1,080 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.865 முதல் 1,112 வரை அதிகரித்துள்ளது. ரூ.650-க்கு விற்கப்பட்ட அம்மோனியம் சல்பேட் உரம் தற்போது ரூ.25.50 உயர்ந்து ரூ.675.50 ஆக அதிகரித்துள்ளது.

உரக்கடைகளில் ஏற்கனவே வரவழைக்கப்பட்ட உரங்கள் இருப்பு இருந்ததால் இதுவரை பழைய விலைக்கு விற்கப்பட்டன. ஆனால் தற்போது புதிய உரமூட்டைகள் வரவழைக்கப்பட்டு புதிய விலையில் விற்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில், “உரங்களுக்கு வரி இல்லாமல் இருந்து. இந்த நிலையில் உரத்துக்கான விலையை தனியார் நிர்ணயித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உரங்கள் விலை உயர்ந்தது. தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் உரங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பூச்சி மருந்தின் விலையும் ரூ.100 வரை அதிகரித்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வரும் நிலையில் உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து உரங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்”என்றார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top