பேராவூரணி அருகே நாடாகாடு கிராமத்தில் உள்ள டி - 1026 மாவடுகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (லிட்) ரூ.40 லட்சம் மோசடி நடந்திருப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
மோசடி குறித்துத் தகவல் தெரிந்து கடந்த வியாழக்கிழமை கூட்டுறவு சங்க அதிகாரிகள் வருவதாக இருந்த சூழலில் இவ்வங்கியின் செயலாளராக இருந்த பேராவூரணி இந்திரா நகரில் குடியிருந்து வரும் முருகானந்தம்(32) கடந்த ஜூன் 28 ஆம் தேதி (புதன்கிழமை) தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் பட்டத்திக்காடு என்ற இடத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு வங்கியின் தலைவராக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.கே.பழனிவேலு தன்னிடமிருந்த சாவியைப் பயன்படுத்தி இங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பை மீறிச் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மறுதினம் வங்கி அதிகாரிகள் தணிக்கை நடத்தி ஆவணங்களை அரசு ஜீப்பில் (டிஎன்-49 ஏ.எம். 7318) மூட்டையாயாகக் கட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்துக் கேட்ட பொதுமக்களுக்கு உரிய பதில் தராமல் அங்கிருந்து அவசர அவசரமாகச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒருவாரக் காலமாக இந்த வங்கி பூட்டிக் கிடப்பதாகவும், தாங்கள் அடகு வைத்த நகைகள் உள்ளதா எனத் தெரியவில்லை, கடன் தள்ளுபடி தொகையைக் கூட்டுறவு வங்கி தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மோசடி செய்துள்ளனர். வங்கியில் ரூ. 40 லட்சம் முதல் 1 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்று கூறித் திங்கட்கிழமை (ஜூலை 3) அன்று வங்கி கதவில் மாலையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த 30 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்துப் பொதுமக்கள் சார்பில் இப்பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறுகையில்," வங்கி கடந்த சில தினங்களாகப் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.கே.பழனிவேலு, வங்கி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் இணைந்து பல்வேறு மோசடிகளைச் செய்துள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. கூட்டுறவு சங்கத்தில் நகை அடகு வைத்த பலருக்கும் ரசீது வழங்காமல் ஏமாற்றி உள்ளனர். இங்குப் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளைத் தனியார் வங்கியில் இருந்து மீட்டுச் சிலருக்குத் திருப்பித் தந்துள்ளனர்.
அசல் மற்றும் வட்டி செலுத்தியும் பலருக்கு நகைகள் திரும்பக் கிடைக்கவில்லை. அடகு வைத்த நகைகள் இருக்கிறதா எனத் தெரியவில்லை. கரும்பு கடன் தள்ளுபடிக்கான காசோலையை ஆத்தாளூர் சங்கீதா தென்னவன் கொடுத்துப் பல நாட்கள் ஆகியும் தள்ளுபடி தொகை ரூ. 35 ஆயிரத்து 206 ரூபாய் இதுவரை தரப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டுக் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.கே.பழனிவேலு, செயலாளர் முருகானந்தம், நகை மதிப்பீட்டாளர், கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆகியோரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெய்சங்கர், நாடாகாடு ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி : தீக்கதிர்
நன்றி : தீக்கதிர்