பட்டுக்கோட்டையில் ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கும் காவல் ஆய்வாளர்.
ஜூலை 18, 2017
0
இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதை ஊக்கப்படுத்தும் விதமாக பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்…! என்றதும் அப்படியே ஹெல்மெட் போட்டு வாகனம் ஓட்டினால் என்ன பரிசா தரபோறீங்க ? என்று நையாண்டி பேசியவர்களை பார்த்திருக்கிறோம்..!
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு உண்மையிலேயே பரிசு வழங்கி உற்சாக மூட்டிவருகிறார் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்பழகன்..! பட்டுக்கோட்டை பேருந்து நிலைய சாலையில் தினமும் மாலை வேளையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வரும் காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து அவர்களை மற்ற வாகன ஒட்டிகளுக்கு முன்னுதாரனமாக இருப்பதாக பாராட்டி திருக்குறள் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்குகின்றனர்.
அதே நேரத்தில் ஹெல்மெட் உயிர்காக்கும் கவசம் என்பதை மறந்து போக்குவரத்து விதியை மீறிச்செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதையும் தவறாமல் செய்து வருகின்றனர். கடந்த ஒருவாரத்தில் மட்டும் பட்டுக்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் புதிய ஹெல்மெட் அணிந்து காவல் ஆய்வாளர் அன்பழகனிடம் இருந்து திருக்குறள் புத்தகங்களை பரிசாக பெற்றுச்சென்றுள்ளனர்.
நாம் ஒருவருக்கு கொடுக்கின்ற பரிசு அவரது வாழ்நாள் முழுவதும் பயனளிப்பதாய் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளிப்பதாக தெரிவித்தார் காவல் ஆய்வாளர் அன்பழகன்..!
இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாரின் வாகன சோதனையை கெடுபிடியாக கருதாமல், தலை கவசம் விபத்தின் போது தங்களின் தலையை காக்கும் உயிர் கவசம் என்று உணர்ந்தாவது ஹெல்மெட் அணியவேண்டும் என்பதே காவல்துறையினரின் வேண்டுகோளாக உள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க