ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெறும் எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மாரியம்மன் கோவில் முன்பு கிராம மக்கள், விவசாயிகள் தொடர்ந்து 94 நாட்களாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் 95-வது நாளான இன்று மத்திய, மாநில அரசுகளின் கவனங்களை ஈர்க்கும் வகையில் புதுக்கோட்டை அருகே மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த போராட்ட குழுவினர் முடிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து கட்சியினரிடமும் ஆதரவு திரட்டப்பட்டது. மாவட்ட காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெடுவாசல் போராட்ட குழுவினர் அனுமதி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திரளில் நடைபெறும் போராட்டத்திற்கு அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் பேருந்துகளில் வந்து இறங்கியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் கழுத்தில் மண்டை ஓடு மாலைகளை அணிந்தும் சில விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு மாவட்ட காவல்துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் சோதனைக் குழாய்களை அகற்ற வேண்டும், மத்திய அரசு முற்றிலுமாக ஹைட்ரோகார்பன் ரத்து செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. மேலும் மாநில அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டசபை கூட்டத்திலேயே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் மக்கள்.