பேராவூரணியில் தொற்றுநோய் தாக்கும் அபாயத்தில் அரசுக் கல்லூரி விடுதி மாணவிகள் உள்ளனர். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி உள்ளது. இது பேராவூரணி நகரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், தென்னங்குடி பிரிவு சாலை அருகில், மாவடுகுறிச்சி கிராம ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் உள்ளது.இந்த விடுதியில் பேராவூரணி அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதி பாதுகாப்பான சுற்றுச்சுவர் வசதியும், இரவுக் காவலர் வசதியும் இல்லாமல் உள்ளது. கல்லூரி விடுதி அருகிலேயே சிறு குட்டைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவிகள் கொசுக்கடியால், நிம்மதியாக உறங்க முடியாமலும், பல்வேறு தொற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்டவைகளால் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேலும் கல்லூரி எதிரிலேயே பட்டுக்கோட்டை சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு, பலகாலமாக அகற்றப்படாததால், துர்நாற்றம் சகிக்க இயலாத வகையில் உள்ளது. அவற்றில் படுத்துப் புரளும் ஏராளமான பன்றிகள் அடிக்கடி கல்லூரி விடுதிக்குள்ளும் புகுந்து விடுவதோடு, கல்லூரியை சுற்றி படுத்து கிடப்பதால், மாணவிகள் அச்சத்துடன் பொழுதைக் கழிக்கும் நிலை உள்ளது.மேலும் சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே 4 மதுக்கடைகள் அமைந்துள்ளதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலும் உள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுப்புறச்சூழல் சீர்கெட்டுள்ள நிலையில், பன்றிகள், கொசுக்களால் பல வகையிலும் அவதிப்படும் நிலையே உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகள், அவற்றில் புரண்டு திரியும் பன்றிகள் மற்றும் கொசுக்கடி காரணமாக இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், விடுதி மாணவியர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு, சிக்குன்குன்யா, மர்ம காய்ச்சல் என பல வகையான நோய்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதோடு, பன்றிகளை அப்புறப்படுத்தவும், மாணவியர் விடுதிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி சுகாதாரம் பேண வேண்டும்" என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பேராவூரணியில் தொற்றுநோய் தாக்கும் அபாயத்தில் அரசுக் கல்லூரி விடுதி மாணவிகள்.
ஆகஸ்ட் 27, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க