கடைமடை பகுதிகளில் ஓராண்டுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேராவூரணி கடைமடை பகுதிகளில் சேதுபாவாசத்திரம், நாடியம், ஊமத்தநாடு, விளங்குளம், சோலைக்காடு, கொரட்டூர், பெருமகளூர் பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல்பாசனம் தரக் கூடிய பெரிய ஏரிகள், 100க்கும் மேற்பட்ட சிறு சிறு குளங்கள் உள்ளன. கடைமடை பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக பருவ மழை பெய்யவில்லை. கடந்தாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டு முழுமையாக கடைமடை பகுதிக்கு தண்ணீர்கிடைக்கவில்லை. மேலும் ஏரி, குளங்கள் முழுமையாக வறண்டதால் 80 அடியில் இருந்த நிலத்த தடிநீர்மட்டம் குறைந்து 200 அடியை தாண்டியது. இதனால் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஏரி, குளங்கள் வறண்டதால் பொது மக்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகள் கூட குடிப்பதற்கு தண்ணீரின்றி தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது. அத்துடன் பல்வேறு இடங்களில் தென்னை மரங்களும் வாடிபட்டுப்போகும் நிலை ஏற்பட்டது. மழை பெய்தால் தான் ஏரி, குளங்கள் நிரம்பி நிலைமையை சமாளிக்க முடியுமென இப்பகுதி பொதுமக்கள் கவலையோடு இருந்தனர்.இந்நிலையில் பேராவூரணி பகுதியில் கடந்த 29, 30, 31ம் தேதிகளில் தொடர்ந்து மழைபெய்தது. 31ம் தேதி இரவு பேராவூரணி கடைமடை பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் இங்குள்ள வயல் வெளி, தென்னந்தோப்பு மட்டுமின்றி அனைத்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பேராவூரணி சுற்றுவட்டராப் பகுதியில் பலத்த மழை ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு.
ஆகஸ்ட் 03, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க