மண்வளம் பெருகி அதிக மகசூல் பெறுவதற்கு பசுந்தாளுர பயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு ஆலோசனை
செப்டம்பர் 13, 2017
0
சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகத்தான மகசூல் பெற வேண்டும் என்றால் அதிகளவு இயற்கை உரங்களை மண்ணில் இட வேண்டும். இதில் முக்கிய பங்கு வகிப்பது பசுந்தாள் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களாகும். ரசாயன உரச்செலவை குறைக்க சாகுபடி நிலபரப்பில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
பசுந்தாள் உரத்தில் தக்கை பூண்டு, சணப்பு, கொளிஞ்சி, அகத்தி, சீமை அகத்தி, பிள்ளிபயிர் ஆகியவை சிறந்தவையாகும். பசுந்தாள் உர பயிர்களால் பயிர்வகை இனத்தை சேர்ந்த பசுந்தாளுர பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து 70 சதவீதம் வரை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி அதில் ஒரு பகுதியை மண்ணில் சேர்ப்பதால் நிலம் வளமடைகிறது. ஒரு ஏக்கரில் 25-45 கிலோ வரை தழைச்சத்தை மண்ணுக்கு கொடுக்கிறது. மண் அமைப்பை சீராக்குகிறது.
மண் அரிப்பை தடுத்து மேல் மண் இழப்பை தடுக்கிறது. மண்ணுக்கு வளம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பிடிப்பு பயிராகவும், நிழற்பயிராகவும், மூடுபயிராகவும், தீவன பயிராகவும் பயன்படுகிறது. மண்ணின் கரிம பொருட்களை (ஆர்கானிக் மேட்டர்) அதிகரிக்க செய்கிறது. களிமண்ணில் இளக்கம் கொடுத்து நீரின் ஊடுருவி பாயும் தன்மை, காற்றோட்டத்தை அதிகரிக்க செய்கிறது. பசுந்தாள் எருவானது பயிரின் பேரூட்டச்சத்தான தழைச்சத்து மண்ணிலிருந்து நீர் மூலம் விரையமாவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.
கீழ்படைகளிலுள்ள (சப்சாயில்) சத்துக்களை கிரகித்து அதை மேல்படைகளில் (சர்பேஸ்சாயில்) சேர்க்கிறது. பசுந்தாளுர பயிர்கள் நிலத்தில் சேரும்போது அங்குள்ள நுண்ணுயிர்கள் விரைவாக பெருகி அவற்றின் செயல்திறன் ஊக்குவிக்கப்படுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் பசுந்தாளுர பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது மண்வளம் பெருகி உள்ள நிலத்தில் சாகுபடி செய்து அதிக மகசூல், லாபம் பெறலாம்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க