திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புதுபட்டினம் பாசன வாய்க்காலில் மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
செப்டம்பர் 19, 2017
0
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புதுபட்டினம் 1-ம் நம்பர் வாய்க்காலுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் ஒன்று பிரிந்து ஒட்டங்காடு ஊராட்சி தெற்கு கோரவயல்காடு, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, சொக்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்கிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வாய்க்கால் மூலமாக 200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன நீரை பெறுகின்றன. இந்த வாய்க்கால் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளம்பட்டி குளத்தில் கலக்கிறது.
இந்த பாசன வாய்க்காலில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளி விற்பனை செய்வது அப்பகுதி விவசாயிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் கட்டையங்காடு, சொக்கநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் பாசன வாய்க்காலில் இருந்து ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவரும், நடுவிக்குறிச்சி தெற்கு பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரும் சேர்ந்து மண் அள்ளி விற்பனை செய்தது தெரியவந்தது. ஏரி, குளங்களில் மட்டுமே மண் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாசன வாய்க்காலில் அனுமதியின்றி மண் அள்ளப்பட்டதும் தெரியவந்தது.
மண் அள்ளப்பட்டதால் பாசன வாய்க்கால் இருந்த இடமே தெரியவில்லை என்றும், நடுவிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் இருந்த இடம் மண் மேடாக காட்சி அளிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து ஒட்டங்காடு பகுதி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் பாசன வாய்க்காலில் இருந்து மண் அள்ளியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நன்றி:தினத்தந்தி
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க