பேராவூரணி ஒன்றியத்தில் ஏரி, குளங்களை அதிகாரி ஆய்வு.
செப்டம்பர் 03, 2017
0
பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், ஏரி குளங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை தஞ்சை மாவட்ட திட்ட அலுவலர் மந்த்ராசலம் அதிகாரிகள் குழுவுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் குடிமராமத்து பணிகள் மூலம் தூர் வாரப்பட்டுள்ளன. தற்சமயம், பெய்து வரும் மழையால் பெரும்பாலான ஏரி, குளங்களில் நீர் நிரம்பி வருகிறது. சாலையோரங்களில் உள்ள ஏரி குளங்களை தூர் வாரும் போது கரையில் இருந்து சரிவாக தூர் வார வேண்டும். மாறாக, (ட) எல் வடிவில் தூர் வாரினால் குளத்து நீரை பயன்படுத்த முயலும் பொதுமக்கள் விபத்துக்களை சந்திக்க நேரிடலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, புனல்வாசல், ஒட்டங்காடு ஆகிய ஊராட்சிகளில் குளங்கள் தூர் வாரும் பணிகளையும் சுகாதார கழிப்பறை கட்டிட வசதிகளையும் பார்வையிட்டார். பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளிடையே அவர் பேசினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க