பேராவூரணி பகுதியில் தேங்காய் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது.

Unknown
0


பேராவூரணி பகுதியில் தேங்காய் மட்டையிலிருந்து  கயிறு தயாரிக்கும் தொழில் தற்போது நலிவடைந்து வருவதால் கயிறு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழில்

தஞ்சை மாவட்டத்தில் நெல் பயிருக்கு  சமமாக பரவலாக தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இதில் உணவிற்காக தேங்காய் மற்றும்  எண்ணை எடுப்பது  மட்டுமல்லாமல்தென்னை சார்ந்த தொழிலாக தென்னங்கீற்று தயாரித்தல்,வீட்டை பெருக்குவதற்கான துடைப்பங்கள் செய்தல் போன்ற தொழிலோடு மட்டுமல்லாமல் தேங்காய் மட்டையிலிருந்து நார் எடுத்து அதைக்கயிறாக  பெரிய, சிறிய வகை சைஸ் என பல்வேறு வகைகளில் செய்து விற்பனைக்கு அனுப்புவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

வெளிமாநிலம்

இந்த வகையில் கடந்த 1990 வது வருடம் முதல் வீட்டுக்கு வீடு குடிசைத்தொழிலாக தஞ்சை மாவட்டத்தில் அதுவும் தென்னைப்பயிறுக்கு பெயர் போன பகுதியான பட்டுகோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கையினால் இயக்கக்கூடிய சிறியவகை இயந்திரங்களைக்கொண்டு கயிறு தயாரிப்பது பல்வேறு குடும்பங்களை வாழவைத்தது. இது தவிர பெரிய முதலீடுகளைக் கொண்டு  வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட  நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து அதிகப்படியான அளவு கயிறுகளை தயாரித்து வெளிமாநிலங்களான கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்புவது நடை முறையிலிருந்தது. மேலும் பெரிய அளவில் இயந்திரங்களைக்கொண்டு ஆரம்பிக்கப்படும் கயிறு தொழிற்சாலைக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டது. இதற்காக கயிறு வாரியமும் அமைக்கப்பட்டு செயல்பட்டுவந்தது.

மறைந்து போண கயிறு

இந்நிலையில் முன்பெல்லாம் கயிறின் தேவைகளும் அதிகம் இருந்ததோடு வெளிமாநிலங்களில் அதிக விலை நிர்ணயம் செய்து வந்ததால் நல்ல லாபம் கிடைப்பதாலும் மூலப்பொருளான தேங்காய் மட்டைகள் தட்டுப்பாடின்றி கிடைத்ததாலும் கயிறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகமாகிவந்தது. இந்நிலையில் கயிறு தொழிலுக்கு பக்கபலமாக இருந்துவந்த மத்திய அரசின் கயிறு வாரியம் தற்போது செயல்படாமல் இருந்துவருவதோடு தமிழ்நாட்டில் கயிறுகளின் தேவைகளும் குறைந்துவருகிறது. இதற்கு காரணம் முன்பெல்லாம் கீற்றினால் அமைக்கப்பட்ட பந்தல்களும் கொட்டகைகளும் அதிகம் இருந்தது.மேலும் ஒட்டு வீடுகளின் மேல் தென்னங் கீற்றைக்கொண்டுதான் கொட்டகைகள் அமைக்கப்பட்டுவந்தது. இதனால் கீற்றைக்கட்டுவதற்கு கயிறு தேவைப்பட்டுவந்ததால் கயிற்றின் தேவைகள் அதிகம் இருந்துவந்தது. ஆனால் தற்போது கொட்டகைகள் அமைத்தாலும், வீட்டு மாடிகளில் செட்டுகள் போட்டாலும் அலுமினியம் மற்றும் இரும்பு சீட்டுகளால் ஆன செட்டு போடுவது தற்போது நடைமுறையாகிவட்டது. இதனால் கயிறுகளுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது.

5% ஜிஎஸ்டி வரிதான்

இது பற்றி கயிறு உற்பத்தித் தொழிலாளர் சேகர் என்கிற சந்கிரசேகர் கூறுகையில் தற்போது கயிறுகளின் தேவைகள் குறைவதாலும் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாலும், கயிறு தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட கயிறு வாரியம் செயல்படாததாலும் தற்போது கயிறு தயாரிக்கும் தொழில் நலிவடைந்துவருகிறது. தற்போது ஒரு சில  தொழிற்சாலைகளைத் தவிர மற்ற ஏராளமான கயிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இந்த தொழில் செய்துவந்தவர்கள்  வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.அதுவும் தற்போது தொழிலில் உள்ளவர்கள் கயிறு தயாரிப்பதை குறைத்துக்கொண்டு பித்து ப்ளாக் எனப்படும் தேங்காய் உரிமட்டை சோறு எடுக்கப்பட்டு அதை கார்பெட் தயாரிக்க கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் செடி வளர்க்கவும் குதிரை, ஒட்டகம் படுக்கும் இடங்களில் வைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. திராட்சை தோட்டத்தில் திராட்சைகொடிகளைக்கட்டுவதற்கும், வெத்திலைக்கொடி கட்டுவதற்கும் தென்னை நார் கயிறுகள் தேவைப்படுகிறது, மற்ற நைலான் கயிறுகளை கட்டினால் சூரிய ஒளியில் வெப்பம் அதிகமாகி செடிகள் கருகிவிடும் என்பதால் இந்த தென்னை நார் கயிறுகளை வைத்துத்தான் கட்டவேண்டும் என்பதால் திராட்சை தோட்டம் மற்றும் வெத்திலைத்தோட்டத்திற்கு  மட்டுமே இது பயன்படுகிறது. ஒரு காலத்தில் படு தீவிரமாக செயல்பட்டுவந்த இந்த கயிறு தொழில் தற்போது நலிவடைந்துவருவது மிகுந்த வேதனையளிக்கிறது. மீண்டும் இந்த தொழில் வளரவேண்டுமென்றால் செயல்படாமல் இருக்கும் கயிறு வாரியம் செயல்படவும் தற்போது  கயிற்றுக்கு விதிக்கப்பட்ட 5 ஜிஎஸ்டி வரியை நீக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டால்  நலிவடைந்த நிலையிலிருக்கும் கயிறு தயாரிக்கும் தொழிலை  நலிவிலிருந்து மீட்டெடுக்கமுடியும்  என்றார்.

நன்றி:அதிரை வானாவில்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top