பேராவூரணி பேரூராட்சி மற்றும் வட்டார சுகாதாரத் துறை இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டார மருத்துவ அலுவலர் வி. செளந்தர்ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அ.கணேசன், காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தஞ்சை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சுப்பிரமணி பேசியது.
பேராவூரணி பகுதி தென்னை மரங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் தானாக வருவதில்லை. நாம்தான் வரவழைத்துக் கொள்கிறோம். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை குடியிருக்கும் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். பருவநிலை மாற்றம் காரணமாகவும் காய்ச்சல் நோய் வருகிறது. சுகாதாரமற்ற முறையில், கொசுப்புழு உருவாகும் வகையில் அலட்சியப்போக்குடன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அருகில் இருந்தால் முதலில் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படும். குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சரிசெய்யாவிட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அனைவரும் சுகாதார உறுதிமொழி ஏற்றனர். கூட்டத்தில் டாக்டர் அறிவானந்தம், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப்சிங், அமுதவாணன், தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்.
செப்டம்பர் 09, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க