தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜசோழனின் 1032-வது சதயவிழா தொடங்கியது.
அக்டோபர் 30, 2017
0
உலகமே வியக்கும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜசோழன் தஞ்சை பெரியகோவிலை கட்டினான். ராஜராஜசோழன் முடிசூட்டிய விழாவை அவரது பிறந்தநாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளன்று ஆண்டுதோறும் சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மாமன்னன் ராஜராஜசோழனின் 1032-வது சதயவிழா நேற்றுகாலை டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் களிமேடு அப்பர் அவையினரின் திருமுறை அரங்கமும் நடந்தது. தொடர்ந்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சதயவிழாக்குழு தலைவர் துரை.திருஞானம் வரவேற்றார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாமன்னன் ராஜராஜசோழன் பெரியகோவிலை கட்டியதன் மூலம் இந்த மண்ணுக்கு உலகளவில் பெருமை சேர்த்துள்ளான். யுனெஸ்கோ நிறுவனத்தால் தமிழகத்தில் 3 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் தஞ்சை பெரியகோவிலும் ஒன்றாகும். பன்னாட்டு அமைப்பே தஞ்சை பெரியகோவிலை அங்கீகரித்துள்ளது. இந்த கோவில் புவி ஈர்ப்பு மையமாக திகழ்கிறது. ஜனாதிபதி, கவர்னர், நீதிபதிகள், அமைச்சர்கள் என யார் தஞ்சைக்கு வந்தாலும் இந்த கோவிலை பார்க்க தூண்டும். எந்த முறை வந்து பார்த்தாலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே கடல் கடந்து நாட்டை கைப்பற்றி ராஜராஜசோழன் ஆட்சி நடத்தி இருக்கிறான்.
மலை இல்லாத இடத்தில் கற்களை கொண்டு வந்து விடாமுயற்சியுடன் கோவிலை கட்டி முடித்துள்ளான். பெரியகோவிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆயுள் பத்தாது. ஒவ்வொரு இடத்திலும் அறிவியல் தன்மையும், ஆன்மிக தன்மையும் இருக்கிறது. இந்த பூமி உள்ளவரை சாதி, மதம், மொழியை கடந்து ராஜராஜசோழனின் புகழை உலகமே பாராட்டி கொண்டிருக்கும். ராஜராஜசோழனின் சதயவிழாவை உலகமே கொண்டாடும் நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு தொடங்கி வைத்தார். பிரிஸ்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மகேசன், கலை கல்லூரி முன்னாள் முதல்வர் குருநாதன், உறந்தராயன்குடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் ஆகியோர் பேசினர்.
இதில் மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகரசபை உறுப்பினர் சரவணன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், உதவி ஆணையளர்கள் பரணிதரன், உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மாமன்னன் ராஜராஜன் கண்ட திருமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து மங்கள இசை, தமிழிசை அரங்கம், திருமுறை பண்ணிசை, நாதஇசை சங்கமம், திருமுறை இசையரங்கம், கவியரங்கம், திருமுறை அரங்கம், கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இன்று(திங்கட்கிழமை) காலையில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் 4 வீதிகளில் திருமுறை வீதி உலா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்பசுவாமிகள் ஏற்பாட்டின் பேரில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
மாலையில் மங்கள இசையும், அதைத்தொடர்ந்து மங்கள லயநாதம், திருமுறை அரங்கம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, திருமுறை பண்ணிசையரங்கம், பட்டிமன்றம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தருமபுரம் இளைய ஆதினம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முன்னிலையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன் செப்புதிருமேனிகள் வெள்ளி ரிஷபவாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க