பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்கால் தூர்வார கோரிக்கை.
அக்டோபர் 03, 2017
0
பேராவூரணி நகரத்தின் மையப்பகுதியில் ஓடும் காவிரியின் கிளை வாய்க்காலான ஆனந்தவள்ளிவாய்க்கால் நகருக்கு அழகு சேர்த்தது பழங்கதையாகி விட்டது. இவ்வாய்க்கால் மூலமாக பல ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. கடந்த பல ஆண்டுகளாக இந்த கிளை வாய்க்கால் தூர் வாரப்படாமலும், ஆட்கள் குளிக்கும் படித்துறைகள் இடிந்து சரி செய்யப்படாமலும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கண்டு கொள்ளாததால், வீடுகளின் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டும், வீடுகளின் கழிவறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கொட்டப்படும் இடமாகவும் மாறிவிட்டது. பொன்காடு பகுதி முதல் செங்கொல்லை, நாட்டாணிக்கோட்டை பகுதிகளில் வீடுகளின் கழிவுநீர் இரவோடு இரவாக குழாய்கள் அமைக்கப்பட்டு,ஆனந்தவள்ளி வாய்க்காலில் விடப்பட்டு சாக்கடைக்கழிவுகளால் பெரும் துர்நாற்றம் வீசுகிறது. இதில் பன்றிகள் விழுந்து புரண்டு அசிங்கம் செய்கிறது. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளோ உறக்கத்தில் இருக்கின்றனர். இதனை உடனடியாக கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இக்கால்வாயை முழுமையாக தூர்வாரிட பொதுப்பணித்துறைக்கு ஆவண செய்யவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க