பேராவூரணி அடுத்த கொன்றைக்காடு கிராமத்தில் சாலை சீரமைப்பு.
அக்டோபர் 05, 2017
0
பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில்,காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இரயில்வே பாதையின் குறுக்கே பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலை உள்ளது. இந்த தார்ச்சாலை பணி நிறைவடையாமல் உள்ளது.இதற்காக கொட்டப்பட்ட மண் தரையிலிருந்து, பேருந்துகள் செல்லும் போது புழுதி பறந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அங்கிருந்த கடைக்காரர்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. மேலும் மழைபெய்யும் போது இச்சாலையை கடந்துசெல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள்வழுக்கி விழுந்து அடிபடும் சம்பவங் கள் நடந்தது.கடந்த 2 மாத காலமாக இதனால்அவதிப்பட்ட இப்பகுதி மக்கள் ரயில்வே துறை, நெடுஞ்சாலை துறையினருக்கு பலமுறை தகவல் அளித்தும் சாலை சரிசெய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஞாயிறு அன்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்ட இடத் திற்கு வந்த பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் ஆசைத்தம்பி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசுவின் மகனும் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகியுமான மா.கோ.இளங்கோ மற்றும் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.பி.இராஜேந்திரன் நெடுஞ்சாலை துறை மற்றும் இரயில்வே துறை உயர் அலுவலர்களுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து சாலைமறியல் முடிவுக்கு வந்தது.சாலை சீரமைப்பு இந்நிலையில் ரயில்வே துறைஅலுவலர்கள் சாலை இடத்தை பார்வையிட்டு, உடனடியாக சாலையை சீரமைக்க உத்தரவிட்டனர்.இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று சாலையில் கப்பி அடிக்கப்பட்டு, தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து சாலை சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தீக்கதிர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க