சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி மருத்துவ அதிகாரி ஆய்வு.
அக்டோபர் 16, 2017
0
தஞ்சை மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படியும், துணை இயக்குனர் சுகாதார பணிகள் வழிகாட்டுதலின் பேரிலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கரிசவயல், அழகியநாயகிபுரம், ரெண்டாம்புளிக்காடு, ஊமத்தநாடு, மருங்கப்பள்ளம், ஆலடிக்காடு, குப்பத்தேவன்வலசை, பெருமகளூர், புதுத்தெரு, சோமநாதன் பட்டினம் ஆகிய பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்றது. இதில் குடியிருப்பு பகுதிகள் கொசுப்புழு உற்பத்தியாகும் சிரட்டைகள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். இந்த பணியை மாவட்ட தொற்றாநோய் பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எட்வின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா எனவும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
வீடு,வீடாக சென்று ஆய்வு நடத்தவும், ஒட்டுமொத்த துப்புரவு பணி, புகைமருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், டாக்டர் இளவரசி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர்கள் அரவிந்தன், முருகானந்தன், ராஜகோபால், கார்த்திகேயன், ஆனந்தன், நல்லதம்பி, திருப்பதி மற்றும் சுகாதார செவிலியர்கள் உடனிருந்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க