மனோரா சுற்றுலா தலம் அருகே அமைக்கப்பட்ட குளோபல் வில்லேஜ் காட்டேஜ் மிகவும் சேதமடைந்தநிலையில் காணப்படுகிறது.
அக்டோபர் 13, 2017
0
மனோரா சுற்றுலா தலத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட குளோபல் வில்லேஜ் காட்டேஜ் தற்போது அரசு மதுபான கடையாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் மனோரா உள்ளது. இந்த மனோரா எனும் நினைவுச் சின்னம். 1814-15இல் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் 2ஆம் சரபோஜி கட்டிய நினைவுச் சின்னம் இது. ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டுக்கும் இடையே நடந்த கடற்படைப் போரில் இங்கிலாந்தின் நெல்சன் தன் உயிரை பலிகொடுத்து நெப்போலியனைத் தோற்கடித்ததை நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் சரபோஜி இதைக் கட்டி முடித்தார்.
இந்த மனோரா கோட்டை எட்டடுக்கு கொண்ட அறுகோண வடிவ கோபுரம். இதன் உயரம் 23 மீட்டர். வங்கக் கடலின் அலைகளுக்கிடையில் கரையில் இந்த கோட்டை பசுமை நிறைந்த கடற்கரையில் நிமிர்ந்து நிற்கிறது. காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் அழகான சூழ்நிலை. மனோரா எனும் பெயர் “மினரெட்” எனும் சொல்லில் இருந்து வந்தது. மினரெட் என்றால் மசூதியின் மெல்லிய உயர்ந்த கோபுரம் அல்லது ஸ்தூபி என்பதாகும். அந்த வடிவத்தில் இது அமைந்திருப்பதால் இதனை “மனோரா” என்றனர்.
மினார் அல்லது மினரட் எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் கோபுரம் எனலாம். இந்த கோபுர அமைப்பைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவரும் அதற்கடுத்து அகழியும் அமைந்து ஒரு கோட்டையைப் போல தோற்றமளிக் கிறது. இங்கு வளைந்த மேற்பகுதியுடன் கூடிய ஜன்னல்கள், வட்டமாய் சுற்றி ஏறும் மாடிப்படி, ஒரு தளத்துக்கும் மறு தளத்துக்குமிடையே தாழ்வாரம் ஆகியவை உண்டு.
இத்தகைய சிறப்பு மிக்க சுற்றுலா தளத்திற்கு மிகுந்த ஆவலுடன் வரும் சுற்றுலா பயனிகள் வெறும் அரை மணி நேரம் கூட பொழுபோக்க போதிய பொழுபோக்கு வசதிகள் இல்லை. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தமிழக சுற்றுலா துறை சார்பில் மனோரா சுற்றுலாத்தலத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் குளோபல் வில்லேஜ் காட்டேஜ் அமைக்கப்பட்டன. மனோராவிற்கு வருகை தரும் சுற்றுலா பயனிகள் தங்குவதற்கும், பொழுது போக்குவதற்கும் ஏற்றவாறு இந்த குடில்கல் அமைக்கப்பட்டு தனியார் பராமரிப்பில் விடப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த இந்த குளோபல் வில்லேஜ் காட்டேஜ் சில ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.. இந்த காட்டேஜ் முற்றிலும் சேதமைடந்த நிலையில் தற்போது உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அரசு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்த போது இந்த குளோபல் வில்லேஜ் காட்டேஜில் அரசு டாஸ்மாக் கடையை அமைத்தனர். சுற்றுலா தலத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட குளோபல் வில்லேஜ் இன்று குடிகார்கள் மட்டும் வந்து செல்லும் இடமாக மாறிவிட்டது. மேலும் இந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் ஒரு பள்ளிவாசல், ஒரு கோவில் உள்ளது. மேலும் சின்னமனை, மல்லிப்பட்டிணம் பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் இந்த டாஸ்மாக் கடையின் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. மனோராவிற்கு வரும் சுற்றுலா பயனிகள் முகம் சுழிக்கும் விதமாக இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் இந்த கடையை அகற்றி மீண்டும் குளோபல் வில்லேஜ் காட்டேஜை சுற்றுலா பயனிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயனிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மனோரா வை சேர்ந்த மீனவர் மனோரா வெங்கட் கூறுகையில் :
இந்த குளோபல் வில்லேஜ் காட்டேஜ் மனோரா சுற்றுல தலத்தை மேம்படுத்தவும் இங்கு உள்ள மீனவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வீதமாக இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடம் மட்டுமே முறையாக செயல்பட்ட இந்த குளோபல் வில்லேஜ் தற்போது டாஸ்மாக் கடையாக செயல்பட்டுவருகிறது.. மனோராவில் உள்ள குடும்பங்களுக்கு குடிதண்ணீர் அங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரம் உள்ள வேளாக்குடி கிராமத்தில் இருந்த வருகிறது. இந்த தண்ணீர் காலை 9 மணி வரையிலும், மாலை 5 மணிக்கு பிறகும் பொது மக்களுக்கு கிடைக்கும், கலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனோராவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல குடிநீர் வசதிகள் கிடையாது. இதற்கா அரசு கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு கடல்நீரை சுத்தகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றினால் அந்த திட்டம் நீண்ட நாட்களுக்கு பயன் அளிக்குமா என்பது சந்தேகம், மேலும் மரம்வளர்ப்பு திட்டத்திற்கு தேவையான போதுமான தண்ணீர் கிடைப்பதில் தட்டுபாடு நிலவும்,. ஆகவே மனோராவில் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள நாடியம் முக்கம் என்னும் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தால் மனோரா பகுதிக்கு நல்ல குடிநீரும், மனோராவில் மரம் வளர்ப்பு திட்டத்திற்கு போதுமான தண்ணீரும் கிடைக்கும். மேலும் கடற்கரையை சுத்தம் செய்து மணல் பரப்ப வேண்டும், பூங்காக்களை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் அதிக சுற்றுலா பயனிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சுற்றுலா பயனிகள் வந்து செல்ல போதுமான பேருந்து வசதிகள் இல்லை. குறிப்பாக மனோராவிற்கு வருகை தரும் சுற்றுலா பயனிகளை மனோரவில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள சேதுபாவாசத்திரத்தில் இறக்கிவிடுகின்றனர். இல்லை என்றால் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள மல்லிப்பட்டிணம் பகுதியில் இறங்கி வரும் சூழல் உள்ளது. அனைத்து பேருந்துகளும் மனோராவில் 400 மீ்டடர் தூரத்தில் உள்ள ஈசிஆர் சாலையில் மனோரா அருகே நின்று செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனோரா சுற்றுலா தலத்தை மேம்படுத்த தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் அந்த குளோபல் வில்லேஜ் காட்டேஜ் சுற்றுலா பயனிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.
நன்றி:பழனிவேல்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க