பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
அக்டோபர் 14, 2017
0
பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென தஞ்சை கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். தஞ்சை கலெக்டருக்கு திருச்சிற்றம்பலம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவியர் விடுதியும் உள்ளது.
இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். பள்ளியின் எல்லையையொட்டி தென்னந்தோப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளது. அப்பகுதியிலிருந்து கால்நடைகள் திடீர் திடீரென வகுப்பறைக்குள் புகுந்து விடுகிறது. மேலும் பாம்பு புகுந்து விடுவதால் மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளியின் வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகள் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்து கிடப்பதால் அருகில் உள்ள தென்னந்தோப்பு நிழலில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்து பள்ளி வளாகத்தில் வீசி விட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.
எனவே மாணவர்கள் நலன்கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செருவாவிடுதியை சேர்ந்த வக்கீல் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பள்ளியின் மூன்று புறமும் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகள் அச்சத்துடன் உள்ளனர். சமூக விரோதிகள் மாலை நேரங்களில் பள்ளி அருகே மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை வளாகத்துக்குள் வீசி செல்கின்றனர். எனவே திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க