விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்குரெயிலில் 2,610 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது.
நவம்பர் 28, 2017
0
காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை பொறுத்து இதன் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் வழக்கமாக திறக்கப்படும் தேதியில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பா, தாளடி சாகுபடிக்காக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு 5-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 900 எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலில் 41 வேகன்களில் 2,610 டன் யூரியா உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர் உர மூட்டைகளை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றினர். இதையடுத்து இந்த உர மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உரம் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப் படும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க