சேதுபாவாசத்திரம் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் தொழிற்சாலையை அகற்ற கோரிக்கை.
நவம்பர் 30, 2017
1 minute read
0
சேதுபாவாசத்திரம் அருகே அடைக்கத்தேவன் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என தஞ்சை கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக முத்தையா என்பவர் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில், கூறியிருப்பதாவது: சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள அடைக்கத்தேவன் கிராமத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி அருகில் உள்ள ரைஸ்மில் வளாகத்தில் தனியார் ஒருவர், தென்னை கழிவு பஞ்சில் இருந்து கேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அங்கு தென்னை கழிவுகளில் தண்ணீர் விட்டு ஊறல் போட்டுள்ளார்.
இதிலிருந்து வெளியாகும் கழிவநீர் துர்நாற்றத்துடன் வெளியேறுகிறது. இது அருகில் உள்ள பொதுக்குளத்தில் சென்று கலக்கும் அபாயம் உள்ளது. இதன் அருகிலேயே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், அங்கன்வாடி, புயல் பாதுகாப்பு மைய கட்டிடம், நியாய விலைக்கடை, அரசுப்பள்ளி, குடிநீர் தொட்டி ஆகியவை உள்ளது . அருகில் உள்ள குடிநீர் ஊற்றுகளை நம்பியுள்ள பொதுமக்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இத்தொழிற்சாலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவும் அபாயம், கொசு உற்பத்தியாகும் நிலை மற்றும் சுவாச பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க