கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி சாலை மறியல் - சிபிஎம் அறிவிப்பு
நவம்பர் 09, 2017
0
கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடவலியுறுத்தி நவம்பர் 20 ஆம் தேதி சாலை மறியல் செய்யப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.தஞ்சாவூர் மாவட்ட கடைமடைப் பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேராததைக் கண் டித்தும், உடனடியாக முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், பேராவூரணி மெயின் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஆவணம் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், “ஆவணத்தில் இருந்து நாகுடி வழியாகசெல்லும் கல்லணைக் கால்வாய்மெயின் வாய்க்கால், ஆனந்தவல்லி வாய்க்கால், கழனிவாசல் கிளைவாய்க்கால் உள்ளிட்ட பல வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் முறையாக தூர்வாரப்படாமல், பெயரளவுக்கு பணிகள் செய்யப்பட்டன.
கல்லணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், கிளை வாய்க்கால்களில் கணுக்கால் அளவிற்கே வந்தது. தற்போது பருவமழையை காரணம் காட்டிதண்ணீர் திறந்து விடப்படவில்லை. பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் பருவமழை போதிய அளவு கைகொடுக்கவில்லை.
ஏரி,குளங்கள் வறண்டு போய் கிடக்கின் றன. நடவு செய்த வயல்களுக்கு போதிய நீரின்றி காணப்படுகிறது. பல இடங்களில், தண்ணீர் இல்லாததால் நடவுப்பணிகள் தாமதமாகி வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாககிடக்கின்றன.எனவே அனைத்து கிளை வாய்க்கால்களிலும், முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடவேண்டும் எனவலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், பொதுமக்கள் இணைந்து நவ.20 (திங்கட்கிழமை) பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மெயின் சாலையில் மறியல் நடத்த தீர்மானித்துள்ளோம்” என்றார்.
நன்றி:தீக்கதிர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க