பேராவூரணியில் ரயில்வே கேட் அருகே குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி.
நவம்பர் 16, 2017
0
பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே கேட் உள்ள இடத்தில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பழைய பேருந்து நிலையம் அருகில், முசிறி- சேதுபாவாசத்திரம் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே, காரைக்குடி- திருவாரூர் அகல இரயில்பாதை பணிகள் கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பழைய பேருந்து நிலையம் அருகில் சேதுசாலையில், ரயில்வே தண்டவாளம் மற்றும் இருபுறமும் பேருந்து வாகன போக்குவரத்திற்காக சாலை அமைக்கும் பணியை சில நாட்களாக ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதில் கப்பி கற்கள் மற்றும் மண் கொட்டப்பட்டு முழுவதுமாக, சரியான முறையில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் சாலையை சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. வாகனங்கள் ஒருபுறத்தில் இருந்து தண்டவாளத்தை கடந்து மறுபுறம் செல்வதற்கு தடுமாற்றம் அடைய வேண்டி உள்ளது. எனவே தாமதம் இன்றி சாலையை சரிசெய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் ஒன்றியச்செயலாளர் ஆவணம் ஏ.வி.குமாரசாமி கூறும்போது, சாலையும், தண்டவாளமும் முறையாக சீரமைக்கப்படாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. எனவே தண்டவாளத்தின் இருபுறமும் தார்ச்சாலையும், தண்டவாளத்தின் நடுவே சிமெண்ட் பலகை அமைத்தும் சாலையை சீரமைக்க வேண்டும். என ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க