2018-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை.
டிசம்பர் 12, 2017
0
2018-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான வழக்கிலும் தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது. 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் முழுமையாக தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தீயாய் பரவியது.
இதனையடுத்து இந்திய மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இருந்த தடை நீங்கியது. ஆனால் பீட்டா அமைப்பு தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டதிருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை கடந்த மாதம் தாக்கல் செய்தது.
அந்த மனுவில் தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறும் செயல் என்று தெரிவித்தனர். இந்த சட்டம் நிறைவேற்றிய பின்பு 5 காளைகள் மற்றும் 15 மனிதர்கள் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு சேதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கான்வில்கர், சந்திரசூட் அமர்வு இந்த குற்றச்சாட்டுகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அளித்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது 2018-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க