தமிழகத்தில் தனி சன்னதியாக இல்லாமல், ரூ.3 கோடியில் தனிக் கோயிலாகவே அமைந்துள்ள எமதர்மராஜன் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன.22-ம் தேதி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் கிராமம். தேவர்கள், சிவபெருமானை வேண்டுவதற்காகச் சென்றபோது, அவர் நிஷ்டையில் இருந்தார். அப்போது, மன்மதனை வரவழைத்து சிவனின் தவத்தை தேவர்கள் கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார்.
பின்னர், ரதிதேவியின் வேண்டுதலுக்காக மன்மதனை உயிர்ப்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுக்கப்பட்டு இருக்கும்போது, அதைச் செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அவருக்கு அருள்புரிந்ததாக புராண வரலாறு கூறுகிறது.
அவ்வாறு அழிக்கும் பணியைச் செய்துவரும் எமதர்மனுக்கு திருச்சிற்றம்பலத்தில் மண்ணால் ஆன சிலையை வைத்து வழிபாடு செய்துவந்துள்ளனர். பின்னர் சிறிய கூரை வீடு போல அமைத்து அங்கு எமதர்மனை வழிபட்டனர். தற்போது அங்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “உயிரைப் பறிக்கும் எமனுக்கும் சிறு கோயில் அமைத்து 1,300 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம்.
முதலில் மண்ணால் ஆன எமன் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்தோம். தற்போது, ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கோயிலைக் கட்டி உள்ளோம். 2 டன் எடையில் சுமார் 6 அடி உயரத்தில் எமனுக்கு கற்சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் ஆயுள் நீடிக்க வேண்டிக்கொள்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் இங்கு ‘ஆயுள்விருத்தி ஹோமம்’ செய்யப்படுகிறது” என்றனர்.
பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலத்தில் தமிழகத்தில் முதன்முறையாக எமனுக்கு கோயில் ஜனவரி 22-ல் கும்பாபிஷேகம்.
டிசம்பர் 18, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க