குரூப் 4 கிராம நிர்வாக அலுவலர் பிரிவு காலி இடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று புதன்கிழமை (டிச. 20) கடைசி நாளாகும்.
கிராம நிர்வாக அலுவலர், குரூப் 4 தேர்வுகள் முதல் முறையாக ஒருங்கிணைந்து நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 494, இளநிலை உதவியாளர் 4 ஆயிரத்து 96, தட்டச்சர் 3 ஆயிரத்து 463 என பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 351 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் சார்பில் ஏழாவது ஊதியக் குழு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு முதல் முறையாக தேர்வு நடத்தப்பட உள்ளது. எழுத்துத் தேர்வினை எதிர்கொள்ள 10 ஆம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றாலே போதும் என்றாலும், பொறியியல், பட்டப் படிப்பு படித்த பலரும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (டிச. 13)) இரவு 11.59 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பக் காரணங்களுக்காக கடைசி நேரத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல. இதுவரை நிரந்தரப்பதிவு செய்யாதவர்கள் உடனடியாக நிரந்தரமாக பதிவுசெய்து அதற்கான பதிவுக்கட்டணம் ரூபாய் 150 செலுத்திய பின்னரே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்திருந்தது. பின்னர் டிஎன்பிஎஸ்சி இணையதள சர்வர சரியாக இயங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்று புதன்கிழமை (டிச.20) விண்ணப்பிக்க கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது.
தேர்வு எழுத ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், மேலும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க கடைசி நேரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் சில லட்சங்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றுக்குள் விரைந்து விண்ணப்பிக்கவும்.