பேராவூரணி சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தை அகற்றி புதிதாக அமைக்க கோரிக்கை.

Unknown
0
பேராவூரணி அடுத்த சொர்ணக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும் ஓடுகள் உடைந்து போய் உள்ள கட்டிடத்தை சீரமைத்துத்தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் சொர்ணக்காடு ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இவ்வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல மையக் கட்டிடம் பயன்பாடற்று மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் உள்புறம் சுகாதாரமற்ற நிலையில் கழிப்பறையாக காட்சி அளிக்கிறது.இந்த மனிதக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் அருகிலேயே பள்ளிகள் சீரமைப்பு திட்டத்தில் கட்டப்பட்ட ஓட்டுக் கட்டிடத்தின், ஓடுகள் உடைந்து வகுப்பறையில் உள்ளே விழும் நிலையில் உள்ளதால் வேறொரு புதிய கட்டிடத்தில் இடநெருக்கடியோடு வகுப்புகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து, இப்பகுதியை சேர்ந்த முன்னாள் பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் ஆர்.செல்வராஜ் என்பவர் கூறுகையில், " கடந்த இரு மாதங்களுக்கு முன் சொர்ணக்காடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், மாவட்ட ஆட்சியரிடம் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை பற்றி சொன்னதும், நேரில் பார்வையிட்டு கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற உத்தரவிட்டார்.

ஆனாலும் ஒன்றிய அலுவலக ஆணையர் மற்றும் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் இதுவரை கண்டுகொள்ளாத நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விடும் அதிகாரிகளை என்ன சொல்வது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை அகற்றியும், மற்றொரு கட்டிடத்தின் ஓடுகளையும் மாற்றித்தர வேண்டும்" என்றார்.தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், மெத்தனப்போக்குடன் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிப்பார்களா என்ன.







Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top