நெல் பயிரில் நோய்களைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் பூஞ்சானக்கொல்லியை பயன்படுத்தலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வை.தயாளன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சூடோமோனாஸ் புளோரசன்ஸ் இயற்கை வழி பயிர்ப்பாதுகாப்பு உயிர் எதிர்க்கொல்லியான பாக்டீரியா வகையைச் சேர்ந்த பூஞ்சானக்கொல்லியாகும். இது மண்ணின் மூலம் பரவும் நோய்களான வேர்அழுகல், வாடல்நோய், நாற்றழுகல், வேர்வீக்க நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன், இலை வழியாகப் பரவும் பூஞ்சான நோய்களான குலைநோய், இலையுறை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது.
மேலும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.
நெல் விதைநேர்த்தி செய்யும்போது 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட வேண்டும். பின்பு விதைகளை ஈர சாக்குகளில் வைத்து நிழலில் உலர்த்தி, முளைக்கட்டி விதைக்க வேண்டும்.
அதேபோல் நாற்றுகளை நனைத்து பயன்படுத்தும்போது 1 கிலோ சூடோமோனஸ் கலவையை 10 சதுர மீட்டர் உள்ள தண்ணீரில் கலந்து 1 ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளை அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நட வேண்டும். அதிக நேரம் ஊற வைத்தால் அதன் செயல்திறன் கூடுதலாக இருக்கும். வயலில் நேரடியாக பயன்படுத்தும்பொழுது 1 ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நாற்று நட்ட 30 நாள்கள் கழித்து இட வேண்டும். நெல்லில் தெளிப்பு முறையை கையாளும்போது சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீத கரைசலை 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் நடவு நட்ட 45 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். இந்த பாக்டீரியா கலவையைத் தயாரித்த 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். மற்ற உயிர் உரங்களுடன் சூடோமோனாஸ் கலவையை பயன்படுத்தலாம்.
இந்த சிக்கனமான, எளிய முறையை கையாளும்போது விதை மற்றும் மண் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பயிர்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்தி பயிர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பை தருகிறது என்றார்.