கூகுள் மேப்ஸ் செயலியில் மோட்டார்சைக்கிள் மோட் அறிமுகம்.
டிசம்பர் 06, 2017
0
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய மோட்டார்சைக்கிள் மோட் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் (v9.67.1) பதிப்பை பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக கார், ஃபூட் மற்றும் டிரெயின் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை மோட்டார்சைக்கிள் ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு போலீஸ் வலைத்தளத்தில் வெளியான தகவலில் புதிய அம்சம் சார்ந்த ஸ்கிரீன்ஷாட்களும் இடம்பெற்றுள்ளது.
கூகுள் மேப்ஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் மோட்டார்சைக்கிள் பயன்படுத்துவோர் பயணம் செய்ய ஏற்ற வழிகளை காண்பிக்கும். கூகுள் மேப்ஸ் செயலியின் மோட்டார்சைக்கிள் மோட் முதற்கட்டமாக இந்திய சந்தையில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்தின் இதர சேவைகள் மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்று வருவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
புதிய மோட்டார்சைக்கிள் மோட் பயணர்களுக்கு ஏற்ற வழிகளை பரிந்துரைப்பதோடு, குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய வழித்தடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் சார்ந்த முழு விவரங்கள் மற்றும் வாகன நிறுத்தம் சார்ந்த விவரங்களையும் வழங்குகிறது. முன்னதாக இதே அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியின் கார் மோட் வழங்கி வந்தது.
முந்தைய கூகுள் மேப்ஸ் செயலியின் மோட்டார்சைக்கிள் மோட் அம்சம் சோர்ஸ் கோடில் மட்டும் பாப்-அப் ஆகி வந்த நிலையில், செயலியில் பயன்படுத்த வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். முதற்கட்டமாக சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் மோட்டார்சைக்கிள் மோட் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க