பேராவூரணியில் அரிவாள், கோடரி, மண்வெட்டி உள்ளிட்ட இரும்பு கருவிகளை செய்து விற்கும் வடமாநில குடும்பத்தினரிடமிருந்து அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
பரம்பரை பரம்பரையாக இரும்பு கருவிகள் செய்வதை தொழிலாக கொண்டு வாழும் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 2 வடமாநில குடும்பத்தினர் பேராவூரணியில் நீலகண்டப்பிள்ளையார் கோயில் அருகில் அமைத்து தங்கி அரிவாள், கத்தி, கோடரி உள்ளிட்ட இரும்பு கருவிகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். சூடேற்றப்பட்டு இரும்பு பட்டையின் தன்மை இளகியவுடன் 2 பேரை சம்மட்டி அடிக்க விட்டு அதற்கு லாவகமாக வடிவம் கொடுக்கின்றனர். பின்னர் தங்கள் கைவண்ணத்தில் உருவான இரும்பு கருவிகளான அரிவாள், கோடரி, கத்தி உள்ளிட்டவற்றை அங்கு தரையில் பரப்பி வைத்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கின்றனர்.
அரிவாள் உள்ளிட்ட கருவிகள் வெளிப்படையாக செய்யப்படுவதை கண்டதும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் அதனை வேடிக்கையாக பார்வையிட்டு செல்கின்றனர். விவசாயிகள், பொதுமக்கள் உள்பட சிலர் தங்களுக்கு தேவையான கருவிகளை ஆர்வத்துடன் வாங்கியும் செல்கின்றனர்.
அந்த வடமாநில குடும்பத்தினர் செய்து விற்கும் இரும்பு கருவிகளின் விலை விவரம் வருமாறு:-
அரிவாள்- ரூ.400, ரூ.350, பெரிய கோடரி- ரூ.700, ரூ.500, இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தி- ரூ.200, ரூ.100, களைவெட்ட பயன்படுத்தப்படும் கருவி- ரூ.400, ரூ.200, உளி-ரூ.100, விறகினை பிளக்கும் வெட்டரும்பு-ரூ.150, ஆட்டுக்கு கருவேலக்காய் பிடுங்க தொரட்டியில் கட்டப்படும் சிறிய அரிவாள்- ரூ.100 என்று விற்பனை செய்து வருகின்றனர்.
பேராவூரணியில் அரிவாள், கோடரி, கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட இரும்பு கருவிகளை செய்து விற்கும் வடமாநில குடும்பத்தினர்.
டிசம்பர் 20, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க