திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புதம்: ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு

Unknown
0






முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். மூல மூர்த்தி செந்தில் வேலவன் எனும் திருநாமம் கொண்டு அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அளவிட முடியாத தெய்வ சானித்தியம் நிறைந்த இத்தலத்தை எண்ணற்ற அருளாளர்கள் பல்வேறு காலகட்டத்தில் போற்றிப் பரவி வந்துள்ளனர்.

1649 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் படையினர் செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அச்சமயம் மதுரையைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியை ஆண்டு வந்தவர் திருமலை நாயக்கர் எனும் மன்னர். செந்தூர் வடிவேலனிடம் அபரிமிதமான பக்தி கொண்டிருந்த இவர் பெரும் படையுடன் சென்று டச்சுப் படையினரைப் எதிர்த்தார். எனினும் அம்முயற்சி கைகூடவில்லை.

திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், ஷண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் வழியில் உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது; காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் மிகக் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் கதறிப் பதறிச் செய்வதறியாது திகைத்தனர். உற்சவ மூர்த்தங்களை உருக்க முனைந்ததாலேயே இந்த இக்கட்டான சூழல் உருவானது என்று ஏக மனதாக முடிவெடுத்து, அவற்றினை அக்கணமே கடலில் சேர்ப்பித்து விட்டனர்.

என்ன வியப்பு! சில கணங்களிலேயே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது. டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இவ்வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. செந்தூர் இறைவனான வள்ளி மணாளனின் திருவுளக் குறிப்பை யாரே அறியவல்லார்! அப்பெருமானின் அனுமதி இன்றி அணுவும் அசையக் கூடுமோ!

இந்நிகழ்வு நடந்தேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செந்தூர் திருக்கோயிலில் உற்சவ மூர்த்திகளைச் செய்விக்கும் பணி மீண்டும் தொடங்கப் பெற்றது. அச்சமயம் வடமலையப்பர் எனும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றியருளினார்; உற்சவ மூர்த்திகள் கடலில் புதையுண்டு இருக்கும் இடத்தைத் தெரிவித்தருளி, அடையாளமாக எலுமிச்சை மிதக்குமென்றும், வானில் கருடப் பறவை தோன்றுமென்றும் அருளிச் செய்தார்.

திருவருளின் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர் கடலில் மூர்த்திகளைத் தேடும் பணியைத் துவக்கினார். குறிப்பிட்ட இடத்தில் குமரக் கடவுளின் திருக்குறிப்பின் படி, நீரில் எலுமிச்சை மிதக்கவும், வானில் கருடப் பறவை தோன்றவும் கண்டு பெருமகிழ்வு எய்தினார். அவ்விடத்தில் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர்.

செந்தூர் வாழ் மக்கள் ஸ்ரீஷண்முகப் பெருமானையும், ஸ்ரீநடராஜ மூர்த்தியையும் திருக்கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்வித்து மகிழ்ந்தனர். தங்கள் வாழ்வோடும் ஆன்மாவோடும் கலந்து விட்ட ஸ்ரீஷண்முகக் கடவுளைப் போற்றித் துதித்துப் பிறவிப் பயன் எய்தினர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top