தமிழ்நாடு கபடி டீமில் தேர்வான புதுக்கோட்டை இளைஞர்.

Unknown
0

புதுக்கோட்டை மாவட்டம், இப்போது தலைசிறந்த கபடி வீரர்களையும் வீராங்கனைகளையும் உருவாக்கும் மாவட்டமாக மிளிர்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த லோகநாயகி என்ற சிறுமி, தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வாகியிருந்தார். இப்போது அடுத்த மகிழ்ச்சி தரும் செய்தி வந்திருக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் உள்ள போசம்பேட்டைக் கிராமத்தில் வசித்துவரும் செந்தூரபாண்டி, இளம் கபடி வீரர். மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்திய அளவிலான தேசிய ஜூனியர் லெவல் போட்டிகளில் விளையாட தேர்வாகியிருக்கிறார். தமிழ்நாட்டின் மாநில அணியின் சார்பாக விளையாடும் ஏழு வீரர்களில் ஒருவராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது, அந்தக் கிராம மக்களையும் இளைஞர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. நண்பர்கள், உறவினர்களின் வாழ்த்துகளுக்கு மத்தியில் சந்தோஷமும் உற்சாகமுமாக இருந்த செந்தூரபாண்டியிடம் பேசினோம்.



"எனது பல வருட கனவு இது. சிறுவனாக இருந்தபோது, எங்கள் ஊர் அண்ணன்கள் கபடி விளையாடுவதைப் பார்த்து எனக்கும் அந்த விளையாட்டில் ஆர்வம் வந்தது. ஸ்கூல் பசங்களெல்லாம் கிரிக்கெட் விளையாடும்போது, நான் மட்டும் தனியாக, 'கபடி, கபடி' என்று சொல்லி, மூச்சு விடாமல் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பேன். கிரிக்கெட் விளையாடும் என் நண்பர்களெல்லாம் என்னை இளக்காரமாகப் பார்ப்பார்கள். ஆனால், அதையெல்லாம் நான் பொருட்படுத்தாமல் இருந்தேன். ஆனாலும் அழுகை வரும். தனியாக உட்கார்ந்து அழுவேன். கபடி நமக்கு மட்டுமே சொந்தமான விளையாட்டு. ஓட்டமும் மூச்சுப் பயிற்சியும் மல்யுத்தமும் கலந்த விளையாட்டு இது. நம் மண் சார்ந்த கபடிக்கு, கமல், விஜய் போன்றவர்கள் சப்போர்ட் செய்வது மகிழ்ச்சியைத்தருகிறது. அதேபோல, ஊடகங்களின் வெளிச்சமும் நம் பாரம்பர்ய விளையாட்டுக்குக் கிடைத்திருப்பது, என்னைப்போன்ற கபடி வீரர்களை உற்சாகப்படுத்துகிறது. என் உயிரே போவதாக இருந்தாலும் கபடி விளையாடிக்கொண்டிருக்கும்போதே போக வேண்டும். அந்த அளவுக்கு இந்த விளையாட்டை நான் நேசிக்கிறேன்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top