பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக கட்டிடம் கட்டப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம் சொர்ணக்காட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல மைய கட்டிடம் பயன்பாடற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அருகிலேயே பள்ளிகள் சீரமைப்பு திட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தின் ஓடுகள் உடைந்து வகுப்பறையில் உள்ளே விழுகிறது.
இதனால் வேறொரு புதிய கட்டிடத்தில் இடநெருக்கடியோடு வகுப்புகள் நடக்கிறது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செல்வராஜ் கூறியதாவது: 2 மாதங்களுக்கு முன் சொர்ணக்காடு ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு உடனடியாக அகற்ற கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். ஆனாலும் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் இதுவரை சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை அகற்றியும், மற்றொரு கட்டிடத்தின் ஓடுகளையும் மாற்றித்தர வேண்டும் என்றார்.
நன்றி:தினகரன்
பேராவூரணி அடுத்த சொர்ணக்காடு பள்ளி வளாகத்தில் சேதமடைந்த கட்டிடம் விரைந்து அகற்றப்படுமா.
டிசம்பர் 28, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க