பேராவூரணி அரசு கலைக் கல்லூரி பேராவூரணியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் முடச்சிக்காட்டில் உள்ளது. பேராவூரணி நகருக்குள் தேவையான இடவசதி இருந்தும் அரசு நிர்வாகம் முடச்சிக்காட்டில் கல்லூரி கட்டிடத்தை அமைத்தது. அப்போதே தமிழக மக்கள் புரட்சிக் கழகம், திராவிடர் விடுதலை கழகம் போன்ற பல்வேறு இயக்கங்களால் 'மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை' என்பது சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால் அப்போதய அமைச்சர் வைத்தியலிங்கம் அவர்கள் போக்குவரத்து வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து தற்போதைய இடத்தில் கல்லூரி அமைக்கப்பட்டது.
ஆனால் கல்லூரி தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் உரிய போக்குவரத்து வசதி இல்லை. ஒரே ஒரு சிற்றுந்தில் சுமார் 150 மாணவர்கள் பயணித்து கல்லூரி சென்று வரும் அவல நிலைமை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
கல்லூரி நிர்வாகமும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும் இணைந்து பேசி மாணவர்கள் கல்லூரி சென்றுவர தேவையான அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
நன்றி:மெய்ச்சுடர்