கடைமடைப் பகுதியான ஆவணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி மெயின் வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி நாளை (டிச. 16ம் தேதி) பேராவூரணி அடுத்த ஆவணம் கடைவீதியில் சாலைமறியல் நடத்தப்போவதாக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அடங்கிய போராட்டக்குழு அறிவித்துள்ளது.
பேராவூரணி அடுத்த ஆவணம் பகுதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை நம்பி, சம்பா சாகுபடி பணிகள் தொடங்கின. ஆனால் இடையில் பெய்த மழையை காரணம் காட்டி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மழை நின்ற நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வறட்சியால் காய்ந்து வருகிறது.
எனவே காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தண்ணீர் திறந்நு விடக்கோரி ஆவணம் கடைவீதியில் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெறவுள்ள சாலைமறியல் போராட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ஆவணம், பெரியநாயகிபுரம் பொதுமக்கள், பங்கேற்கவுள்ளனர்.