செருவாவிடுதி இலவசமாக கொசு மருந்து தெளிக்கும் வாலிபர்.
டிசம்பர் 03, 2017
0
பேராவூரணி அடுத்த உள்ள செருவாவிடுதி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 28). சொந்தமாக உழவு இயந்திரம் வைத்து விவசாய பணிகளுக்கு குறைந்த வாடகைக்கு கொடுத்து, உழவுத் தொழிலுக்கு உதவி செய்து வருகிறார்.
தற்சமயம் பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் பகுதியில் பெய்து வரும் மழையால் சாலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி அதிக அளவில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் சூழல் உள்ளது.
குப்பைகள், சாக்கடைகளை பார்த்து பலரும் முகம் சுழித்து அரசைக் குறைகூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகலும் நிலையில், இதனைக் கண்ட ரமேஷ் தனது சொந்த செலவில், செருவாவிடுதி கடைவீதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் வாடகைக்கு கைத்தெளிப்பான் எடுத்து கொசுமருந்து தெளித்து வருகிறார். மருந்து வாங்குவதற்காக தினமும் ரூபாய் ஆயிரம் வரை செலவு செய்யும் ரமேஷ், சமூக சேவையாக இப்பணியினை மேற்க் கொண்டுள்ளார். ரமேஷின் இந்த சமூக சேவைக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரித்துள்ளனர்.
இதுகுறித்து ரமேஷிடம் நாம் பேசியபோது, "இதுவெல்லாம் ஒரு பெரிய பணி இல்லை. ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன்" என சிறு புன்னகையோடு தனது பணியில் கவனம் செலுத்த தொடங்கினார்.
மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற இளைஞர்களை அழைத்து பாராட்டினால் போதும். பலரும் ஆர்வமாக சுகாதார பணிகளில் கவனம் செலுத்தும் நிலை உருவாகும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க