ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி நாட்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறும். இந்த நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம் ஆகும். இந்த நேரத்தில் சிவனை வணங்கி வழி பட்டால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. இந்த பிரதோஷ நாள் அன்று சிவன் கோவில் களில் சிவன் மற்றும் நந்தியெம்பெருமானுக்கு பால், சந்தனம், இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி இந்த மாதத்தில் வரும் 2-வது பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இந்த பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ பிரதோஷமாகும். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள், நட்சத்திரம், திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது ஆகும்.
அதன்படி இந்த ஆண்டு(ஹேவிளம்பி) திங்கட்கிழமை, திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி இந்த மூன்றும் ஒன்றாக வந்ததால் இந்த பிரதோஷத்தன்று வழிபட்டால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். தஞ்சை பெரிய கோவிலில் இந்த பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு சிவனுக்கு பால், இளநீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங் களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் சிவனுக்கு எதிரே அமைந்துள்ள நந்தியெம்பெருமானுக்கும் பால், இளநீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.