தென்னை மரங்களில் சாறு வடிதல் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ஈஸ்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 8.100 ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் பலவித நோய்கள், பூச்சிகள் பெருமளவு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதில் முக்கியமானது சாறு வடிதலாகும். முதல்வகை சாறுவடிதல் சிவப்பு கூன் வண்டால் ஏற்படும்.
சிவப்பு கூன்வண்டு தாக்கிய மரங்களின் தண்டுகளிலிருந்து சிறு துளைகள் மூலமாக பழுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் கூடிய சாறு வடியும். பெரும்பாலும் தண்டில் 2- 3 அடி உயரத்திலேயே இவ்வகை சாறு வடிதல் காணப்படும். இதை கட்டுப்படுத்த சாறு வடியும் தண்டு பகுதியில் துளைகள் வாயிலாகவே டைகுளோர்வாஸ் 5 மில்லி மருந்து, 5 மில்லி தண்ணீர் என்ற அளவில் கலந்து ஊற்றவும். இதனால் புழு மற்றும் கூட்டு புழுக்களை கட்டுப்படுத்த முடியும்.
இரண்டாவது சாறு வடிதல் நோயின் அறிகுறியானது தரை மட்டத்திலிருந்து 3- 5 அடி உயரத்தில் காணப்படும். சாறு வடிதல் தண்டு பகுதியிலிருந்து மேல்நோக்கி பரவக்கூடியது. இந்நோயை கட்டுப்படுத்த ஹெக்ஸாகோனசோல் 1 மில்லி, 100 மில்லி தண்ணீருடன் கலந்து 3 முறை வேர் மூலம் செலுத்த வேண்டும். 6 மாதத்துக்கு ஒருமுறை சூடோமோனாஸ் 100 கிராம், டிரைக்கோடெர்மாவிரிடி 100 கிராமை சாண குப்பையுடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.
மூன்றாவது சாறு வடிதல் நோயானது தஞ்சை வாடல் நோய் அல்லது அடித்தண்டழுகல் நோயால் ஏற்படும் சாறு வடிதல் மரத்தின் அடிப்பகுதியிலிருந்து ஒரு மீட்டர் உயரத்துக்குள் தென்படும். மரத்தின் அடித்தண்டு பகுதியில் சைலிபோரஸ் எனும் வண்டுகள் துளையிட்டு அதன்வழியாக மஞ்சள் நிறத்துகள்கள் வெளியே தள்ளப்பட்டிருக்கும்.
இந்நோயை கட்டுப்படுத்த ஹெக்ஸாகோனசோல் 1 மில்லி, 100 மில்லி தண்ணீருடன் கலந்து 3 மாத இடைவெளியில் மூன்று முறை வேர் மூலம் செலுத்த வேண்டும். நான்காவது சாறு வடிதல் என்பது இடி மற்றும் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களின் தண்டின் கீழிலிருந்து உச்சி வரை வெடிப்புகள் தோன்றி அவற்றிலிருந்து மணமற்ற செந்நீர் வடியும். குறைவான அளவு பாதிக்கப்பட்ட மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உரம், நுண்ணூட்ட சத்துகளை இடுவதன் மூலமாக மரங்களை காப்பாற்ற முடியும். தவறினால் காண்டாமிருக வண்டுகள் தங்களது வாழ்விடமாக மாற்றி கொள்ளும்.