பேராவூரணி வட்டாரத்தில் உள்ள தனியார் உர விற்பனையாளர்கள் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் உரவிற்பனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன் விபரம் வருமாறு:-
உரவிற்பனையாளர்கள் உர உரிமம் முறையாக பெற்றிருக்க வேண்டும்.உர விற்பனை உரிமத்தினை பார்வையில்படும் படி பிரேம் போட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். உரிமத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியினை தவிர வேறு இடத்தில் உரம் இருப்பு வைத்திடவோ, விற்பனை செய்திடவோ கூடாது. உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை விபர பலகையினை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். உர விற்பனையின் போது விற்பனை முனை இயந்திரம் மூலம் மட்டுமே பட்டியலிட்டு கணினி விற்பனை ரசீதினை விவசாயிகள் வசம் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும்.மேலும் “ஓ” படிவம் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே உரங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்தல் வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி முடிய கணக்கு முடித்து உரத்தின் பெயர், ஆரம்ப இருப்பு, இம்மாத வரவு, மொத்தம், விற்பனை, இம்மாத முடிவில் இருப்பு என்ற விபரப்படி உரிய படிவத்தில் உரம் இருப்பு குறித்த விபர அறிக்கையினை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தவறாது அனுப்ப வேண்டும்.மேலும், அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வது உரக்கட்டுப்பாடு சட்டம் 1985 ஷரத்து 3-இன் படி குற்றமாகும். உரிமம் இல்லாமல் உரம் விற்பனை செய்வது உரக்கட்டுப்பாடு சட்டம் 1985 ஷரத்து 7-இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
தரமற்ற மற்றும் கலப்பட உரம் விற்பனை செய்தல் உரக்கட்டுப்பாடு சட்டம் 1985 ஷரத்து 19-இன் படி குற்றமாகும். உரங்களை விவசாய பயன்பாட்டிற்கு அல்லாது பிற தவறான காரணங்களுக்காக விற்பனை செய்வது உரக்கட்டுப்பாடு சட்டம் 1985 ஷரத்து 25-இன் படி தண்டனைக்குரிய மிகக்கடும் குற்றமாகும். எனவே மேற்கண்ட விதிகள் மற்றும் நெறிமுறைகள் மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 21 தினங்களுக்கு விற்பனை நிறுத்தம் செய்து நடவடிக்கை எடுப்பதுடன் உடனடியாக உரிமம் ரத்து செய்தல் மற்றும் சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேராவூரணியில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை.
ஜனவரி 20, 2018
1 minute read
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க