மல்லிகை மொட்டுகள் பனியால் கருகி விடுவதால் புதுக்கோட்டைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை 1,200க்கு விற்பனையானது. புதுக்கோட்டை, கொத்தமங்கலம், வம்பன், மழையூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பூக்கள் பயிரிட்டு வருகின்றனர். இங்கிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகபட்டினம், திருத்துறைப்பூண்டி, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை உயர்வது வழக்கம்.
ஆனால், மொத்த கடைகளுக்கு வரத்து அதிகமாக இருந்தால் விலை உயர்வில் சிறிது மாற்றம் இருக்கும். இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தில் பூக்களின் தேவை அதிகரித்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக அதிக பனி பொழிவு காரணமாக மல்லிகை உட்பட பூக்கள் செடிகளிலேயே கருக தொடங்கின. இதனால், உற்பத்தி குறைந்த நிலையில், புதுக்கோட்டை மொத்த விலை கடைகளுக்கு வரத்தும் குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் முதல் மல்லிகை பூ கிலோ 900 முதல் 1200 வரை விற்பனையானது. கேந்தி 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல சாமந்தி, ரோஜா, பிச்சி உள்பட அனைத்து பூக்களின் வரத்தும் குறைவாக இருந்ததால், அதிக விலைக்கு விற்கப்பட்டன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மல்லிகை மொட்டுகளின் நுனி பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனி விழுந்து தேங்கியிருக்கும். அதன் மீது ெவயில் படும் நிலையில் அந்த மொட்டுகள் கருகி விடும். மழைநீர் தேங்கினால் இதுபோல நடக்காது. தற்போது பனி பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. அதனால் விலை உயர்ந்துள்ளது என்றனர்.