தமிழகத்தில் வாழைத்தார் வரத்து 65 சதவீதம் குறைந்துள்ளதால், விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. கோவை தடாகம் ரோட்டிலுள்ள மாநகராட்சி வாழைக்காய் கமிஷன் மண்டி வளாகத்தில் தினசரி வாழைத்தார் ஏலம் நடக்கிறது. இங்கு தினசரி தென் தமிழக மாவட்டங்களில் இருந்து பல்வேறு ரகங்கள் கொண்ட வாழைத்தார் 6 ஆயிரம் எண்ணிக்கையில் வருவது வழக்கம். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புயல் காரணமாக வாழை மரங்கள் முறிந்து, வாழைத்தார் வரத்து 15 சதவீத அளவில் மட்டுமே இருந்தது. இதற்கு மாற்றாக ஆந்திராவில் இருந்து வாழைத்தார்கள் 20 சதவீத அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் வரத்தில் 3ல் 2 பங்கு குறைந்து, கடந்த 3 வாரமாக விலை உயர்ந்து வருகிறது. நேற்று மொத்த விற்பனை விலை விபரம் கிலோ கணக்கில் (அடைப்புக்குறிக்குள் கடந்த வார விலை ) வருமாறு: பூவன் ரூ.32 (27), மோரிஸ் ரூ.22 (20), ரஸ்தாளி ரூ.37 (35), கற்பூரவள்ளி ரூ.35 (30), நாடன் ரூ.35 (30), நேந்திரன் 30 (27), செவ்வாழை ரூ.70 (65), கதளி ரூ.45 (43), மொந்தன் ரூ.30 (25), சக்கை ரூ.28 (22). இதே நிலை தமிழகம் முழுவதும் உள்ளதால், தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகை முடியும் வரை வாழைத்தாருக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை தொடர்ந்து உயரும் என்கின்றனர் வியாபாரிகள்.